பொதுவாகவே வீக்கம் என்றதும் பலருக்கும் அது புற்றுநோயாக இருக்குமோ என்ற பயம் ஒட்டிக்கொள்கிறது. அதன் தோற்றம் எப்படியிருக்கிறது, எவ்வளவு வேகத்தில் பெரிதாகிறது என்பதையெல்லாம் பார்த்து மருத்துவர், அந்த வீக்கம் புற்றுநோய் தொடர்புடையதா, சாதாரணமானதா என்பதைக் கண்டுபிடிப்பார். ஒருவேளை அது புற்றுநோயாக இருக்கலாம் என மருத்துவர் சந்தேகப்பட்டால், பயாப்சி பரிசோதனை செய்து, அதில் புற்றுநோய் செல்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார். பெரும்பாலான நேரங்களில் இன்ஃபெக்ஷன் காரணமாக வீக்கம் வரலாம். அப்படிப்பட்ட வீக்கத்தின் உள்ளே சீழ் கோத்திருந்தால் அதை வெளியேற்ற வேண்டும் அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
உடல் முழுவதும் வீங்கியிருந்தாலோ, கால்கள் முழுவதும் வீங்கியிருந்தாலோ, மருத்துவர்கள் சில காரணங்களைச் சந்தேகிப்பார்கள். அதாவது இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவற்றில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்ற கோணத்தில் பரிசோதிப்பார்கள். இதுபோன்ற பிரச்னைகளில் உடல் முழுவதும் நீர்கோப்பது நடக்கும். அதற்கு ‘அனசார்கா’ (Anasarca ) என்று பெயர்.

அனீமியா எனப்படும் ரத்தச்சோகை, தைராய்டு பாதிப்புகளாலும் இவ்வகை வீக்கம் வரலாம். வெறும் வீக்கம் மட்டும் தென்படுகிறதா, கூடவே மூச்சு வாங்குதல், நெஞ்சு படபடத்தல் போன்றவையும் இருக்கின்றனவா என கேட்கப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஹீமோகுளோபின் அளவு, தைராய்டு அளவுகளுக்கான ரத்தப் பரிசோதனையும், இதயத்துக்கான இசிஜி பரிசோதனையும் பரிந்துரைக்கப்படும்.
வீக்கத்துக்கான காரணம், அதன் தன்மையைப் பொறுத்தே சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும். அதன்படி, சாதாரண ஆன்டிபயாடிக் மருந்துகள் முதல் அறுவை சிகிச்சைவரை சிகிச்சை எப்படியும் இருக்கலாம். உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றின் காரணமாக ஏற்பட்ட வீக்கமாக இருந்தால், நோய்க்கான பிரத்யேக சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். எதற்கெடுத்தாலும் கூகுள் டாக்டரிடம் ஆலோசனை கேட்காதீர்கள். அதில் சொல்லப்படுகிற தகவல்களை அப்படியே நம்பி, தேவையற்ற பயத்துக்கும் பதற்றத்துக்கும் ஆளாகாமல், முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவதுதான் சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.