சென்னை: தமிழகம் முழுவதும் 809 மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 2.20 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய பணிகளில் காலியாக இருந்த 1,996 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியிட்டது. இதற்கான போட்டித் தேர்வை எழுத 3,734 மாற்றுத் திறனாளிகள் உட்பட 2.36 லட்சம்பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.
இதற்கிடையே, முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதனால், தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் இல்லை என்று கூறி, தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், டிஆர்பி உறுதியாக மறுத்துவிட்டது. இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு மாநிலம் முழுவதும் 809 மையங்களில் நேற்று நடைபெற்றது. 2.20 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.
அதாவது, விண்ணப்பித்ததில் 93.18 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர். இதன்மூலம் ஓரிடத்துக்கு 110 பேர் போட்டியில் உள்ளனர். தேர்வு எழுத 16,118 பேர் வரவில்லை. வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.