மதுரை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை (நவ.12) விசாரணைக்கு வருகிறது
சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளது.
இந்த வாழக்குகளில் கஸ்தூரியை கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருநகரில் நாடார் மகாஜன சங்கம் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில இன்று (திங்கள்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்.” எனக் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீஸார் நேற்று சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவரது செல்போன் எண்ணை போலீஸார் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் போலீஸார் சம்மனை அவரது வீட்டுச் சுவரில் ஒட்டிவிட்டுச் சென்றனர். கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டார் என்று கூறப்பட்டது. மேலும் அவர் முன்ஜாமீனுக்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியான நிலையில் அவர் மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.