முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு | High Court dismisses former admk minister K.C. Veeramani’s petition

1369865
Spread the love

சென்னை: வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் குறித்து தவறான தகவல் தெரிவித்ததாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தனது வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை தெரிவித்ததாக, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி வேல்முருகன் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளாக மாறி விடுவதால் அவர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி ராஜகோபாலன், 2021-ஆம் ஆண்டு ராமமூர்த்தி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், வருமானவரித் துறை விசாரித்து அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. வருமானவரித் துறை அளித்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி சொத்து விவரங்களை மறைத்துள்ளதும், போலியான பான் எண்ணை குறிப்பிட்டிருந்தது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தாலும் தேர்தல் அதிகாரி பதவி பறிக்கப்பட்டு விடாது என்றும் வாதிட்டார்.

இதேபோல புகார்தாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹரிகுமார் வாதங்களை முன்வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், முன்னாள் அமைச்சர் கே சி வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *