தமிழகத்தில் 2011-2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.
அப்போது, சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்திடமிருந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான அனுமதிக்காக ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், ஊழல் தடுப்புப்பிரிவினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதற்கிடையே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், வைத்திலிங்கத்துக்கு தொடா்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறையினா் சோதனை நடத்தி,பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.