ஜெயலலிதா சிறந்த ஆட்சியாளர்
பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிந்து வெளியிட்டுள்ள பதிவில்,ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன். அவரைப் பற்றி இந்த மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது இங்கு இடம் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
பிறந்தநாளில் வீரசபதம் ஏற்போம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்தள பக்கத்தில், “எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.
அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து, கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி,
தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
