வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்க இருக்கும் நிலையில், வார்டு பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் செய்ய வேண்டாம் என்று ராஜ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார். தாமதம் செய்வதால் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வது கடினமாக இருக்கும் என்றும் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தாக்கரே சகோதரர்களுக்கு விஷப்பரீட்சை!
இத்தேர்தல் தாக்கரே சகோதரர்களுக்கு முக்கியமான சோதனையாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். “உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ஆனால் சிவசேனா உடைந்த பிறகு வேறு வழியில்லாமல்தான் கடைசியாக உத்தவ் தாக்கரே ராஜ் தாக்கரேயிடம் வந்திருக்கிறார். அதேசமயம் ராஜ் தாக்கரேயும் தேர்தலில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்தார். எனவேதான் உத்தவ் தாக்கரேயுடன் வேறு வழியில்லாமல் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இரண்டு பேருமே இப்போது தங்களின் தேவைக்காகவே கூட்டணி சேர்ந்து இருப்பதாகவும், இத்தேர்தல் அவர்களுக்கு கடைசி பரீட்சையாக அமையும்” என்று மகாராஷ்டிரா அரசியல் ஆலோசகர் பிர்ஜுமுந்த்ரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “மும்பை மாநகராட்சித் தேர்தலுக்கு தாக்கரே பிராண்ட் மட்டும் போதுமானது கிடையாது. நகராட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போன்று மும்பை மாநகராட்சியிலும் வெற்றி பெற பா.ஜ.க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் தொடர மறுத்து இருப்பது, தாக்கரே சகோதரர்களுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் சாதித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் தாக்கரே சகோதரர்கள் இருக்கின்றனர்”‘ என்றார். கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளும் இரண்டு நாள்களில் அறிவிப்பு வெளியிடும் என்று உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.