மும்பை நகராட்சித் தேர்தல்: வேட்பாளர் பிரசாரத்திற்குச் சென்றபோது டிரைவருக்கு மாரடைப்பு; கார் மோதி 3 பேர் பலி

Spread the love

மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் வரும் 2ம் தேதி நகராட்சித் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

சிவசேனா வேட்பாளர் கிரண் செளபே தேர்தல் பிரசாரத்திற்காக காரில் சென்ற போது திடீரென காரை ஓட்டிய லட்சுமண் ஷிண்டேவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. கார் அங்குள்ள மேம்பாலத்தின் மீது ஏறியபோது இச்சம்பவம் நடந்தது.

இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலை தடுப்பைத் தாண்டி எதிரில் வந்த வாகனங்கள் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த இரண்டு பேர் மேம்பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர். விபத்தைப் பார்த்ததும் உள்ளூர் மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

வேட்பாளர் கிரண் காயத்துடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிரைவர் லட்சுமண் விபத்தில் சிக்கி இறந்து போனார். அவரை காரில் இருந்து எடுக்க மீட்புக் குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.

இது தவிர பைக் ஓட்டி வந்த இருவர் உட்பட மேலும் மூன்று பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இது குறித்து வேட்பாளர் கிரண் கூறுகையில், “‘கார் மேம்பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தது. அந்நேரம் டிரைவர் லட்சுமணுக்கு ஏதோ போன் வந்தது. அவர் போனை எடுத்துப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென போன் பேசுவதை நிறுத்தினார்.

அவரது காலை பார்த்தபோது ஆக்சிலேட்டரை மிதித்துக்கொண்டிருந்தார். இதனால் கார் கட்டுப்பாடு இல்லாமல் சென்று மற்ற வாகனங்கள் மீது மோதியது” என்றார்.

விபத்தில் தப்பிய அமித் சவான் இது குறித்து கூறுகையில், ”கார் மேம்பாலத்தில் மேல் வேகமாக வந்து கொண்டிருந்தது. நாங்கள் தப்பிக்க நினைக்கும் முன்பு எங்களது வாகனத்தின் மீது மோதிக்கொண்டது” என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *