மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். உங்களது பெயர் பணமோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.
இதில் தனக்கு தொடர்பு இல்லை என்று அப்பெண் தெரிவித்தார். ஆனால் அப்பெண் மீதான வழக்கு ஆன்லைன் கோர்ட்டில் விசாரிக்கப்படும் என்று அக்கும்பல் தெரிவித்தது.
அதன்படி ஆன்லைன் கோர்ட்டில் அக்கும்பல் மும்பை பெண்ணிடம் விசாரணை நடத்தியது. நீதிபதியாக இருந்த நபர் தன்னை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் அப்பெண் தனக்கு பணமோசடியில் தொடர்பு கிடையாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆய்வுக்காக உங்களது சொத்து விவரங்களைத் தெரிவிக்கும்படி நீதிபதியாக இருந்தவர் கேட்டுக்கொண்டார். அப்பெண்ணும் தனது சொத்து விவரங்களைத் தெரிவித்தார்.
இதனையடுத்து அந்தச் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என்றும், ஆய்வு செய்து முடித்த பிறகு சொத்துகள் திரும்பக் கொடுக்கப்படும் என்றும் கூறி அப்பெண்ணிடம் இருந்த பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அப்பெண்ணும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு ரூ.3.75 கோடியை அனுப்பி வைத்தார்.
ஆனால் சொன்னபடி அவர்கள் அப்பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. பல மாதங்கள் காத்திருந்த பிறகு அப்பெண் இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இது குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் மங்கேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரைக் கைது செய்தனர்.