மும்பை மாநகராட்சித் தேர்தல்: 100 வார்டுகளைக் கேட்டுப் போராடிய ஷிண்டே; 90 வார்டுகளைக் ஒதுக்கிய பாஜக | Eknath Shinde fought for 100 wards in Mumbai municipal elections: BJP allocated 90 seats to him

Spread the love

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரே கட்டமாக வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இத்தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. அதேசமயம் பா.ஜ.கவும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

இதற்காக தொகுதிப் பங்கீடு இரு கட்சிகளிடையே கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து நடந்து வந்தது. இப்பேச்சுவார்த்தையில் சிவசேனா தங்களுக்கு 100க்கும் அதிகமான வார்டுகள் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தது. இது தொடர்பாக இரு கட்சித் தலைவர்களும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையில் சிவசேனாவிற்கு 70 வார்டுகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்தது. ஆனால், 100க்கு மேல் இடங்கள் வேண்டும் என்பதில் ஏக்நாத் ஷிண்டே பிடிவாதமாக இருந்தார். இது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் நேரடியாகச் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மும்பை மாநகராட்சித் தேர்தல்

மும்பை மாநகராட்சித் தேர்தல்

நீண்ட இழுபறிக்குப் பிறகு சிவசேனாவிற்கு 90 இடங்களை பா.ஜ.க ஒதுக்கியுள்ளது.

இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் கூறுகையில், “‘எங்கள் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டன. நாங்கள் இப்போது கூட்டாகப் பிரசாரம் செய்வோம். மஹாயுதியின் மேயர் மும்பை மாநகராட்சியில் அமர்வதை உறுதி செய்வோம். பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிடும். சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சிவசேனா சார்பாகப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ராகுல் ஷெவாலே இதுகுறித்து கூறுகையில், ”தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக இருந்தது. தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பா.ஜ.க 70 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ராக்கி ஜாதவ் நேற்று பா.ஜ.கவில் சேர்ந்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட பா.ஜ.க சீட் கொடுத்திருக்கிறது. இதே போன்று காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் தேவேந்திர அம்பேகர் அக்கட்சியிலிருந்து விலகி சிவசேனா(உத்தவ்)வில் சேர்ந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *