மும்பை: மும்பையில் மோனோரயிலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று(ஆக. 19) மாலை கனமழைக்குமிடையில் இயக்கப்பட்ட மோனோரயில் ஒன்று மும்பை மைசூரு காலனி ஸ்டேசன் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, பாதி வழியில் திடீரென நின்றது. மின் தடை பிரச்சினையால் இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ரயிலில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மைசூரு காலனி – பக்தி பார்க் நிலையங்களுக்கு இடையில் நடுவழியில் நின்ற மோனோரயிலில் சிக்கிக் கொண்ட 400-க்கும் மேற்பட்ட பயணிகளும் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக வெளியேற முடியாமல் தவித்தனர். ரயிலில் கூட்டநெரிசல் மிகுந்திருந்ததால் போதிய காற்றோட்டமின்றி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நல்வாய்ப்பாக எவ்வித உயிர்ச்சேதமுமின்றி அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.