மகாராஷ்டிராவில் இருந்து 150 கன்டெய்னர் திராட்சைகள் மும்பை துறைமுகத்தில் இருந்து துபாய் துறைமுகத்திற்கு வந்த பிறகு அவை இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் 200க்கும் மேற்பட்ட வாழைப்பழக் கண்டெய்னர்கள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சிக்கித் தவிப்பதால் நிதி நெருக்கடி அதிகரித்து வருவதாகவும் சந்த் ப்ரூட்ஸ் நிறுவனத்தின் பழ ஏற்றுமதியாளர் யூனுஸ் பக்வான் கூறினார். ஏற்றுமதியாளர்கள் ஒரு கண்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8,500 தினசரி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் தேங்கிக்கிடக்கிறது என்றும் பக்வான் கூறினார்.
வாழைப்பழ கண்டெய்னர்கள் குவிந்து கிடப்பதாலும் ஏற்றுமதி குறைந்து வருவதாலும் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 25 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக சரிந்துள்ளது. போர் காரணமாக விலை மேலும் சரியக்கூடும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.
ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு
கண்டெய்னர்களுடன் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான மின்சாரம் மற்றும் பிற செலவுகளுக்காக ஒரு கன்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8500 வரை ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் அங்கு செல்ல முடியாததால், அவை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விடப்படுகின்றன. இதனால் உள்ளூர் சந்தையில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. ரம்சான் பண்டிகையையொட்டி வளைகுடா நாடுகளில் நிலவும் அதிக தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும், வரவிருக்கும் அல்போன்சா மாம்பழ சீசனும் இப்போரால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.