மும்பையில் ஏற்கனவே இருக்கும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், விமானப் போக்குவரத்து நெருக்கடியில் திணறிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து மும்பை அருகில் நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 1997 ஆம் ஆண்டே இதற்காக மாநில அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன.
இத்திட்டத்திற்குத் தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பதிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
விமான நிலையம் அமைய இருந்த இடத்தில் இருந்த கிராம மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த விமான நிலையக் கட்டுமானப்பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

அதன் பிறகு விமான நிலையக் கட்டுமானப்பணியை அதானி நிறுவனம் 2021ம் ஆண்டு தனது கையில் எடுத்தது. இதையடுத்து கட்டுமானப்பணிகள் தீவிரம் அடைந்தன.
கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆனாலும் சில கட்டமைப்புப் பணிகள் முடிவடையாமல் இருந்ததால் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
டிசம்பர் 25ம் தேதி விமான நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலையில் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. பெங்களூருவில் இருந்து வந்த இண்டிகோ விமானம் நவிமும்பை விமான நிலையத்தில் காலை 8 மணிக்குத் தரையிறங்கியது. இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்கள் கேக் வெட்டியும், தேங்காய் உடைத்தும் அதனைக் கொண்டாடினர்.
காலை 8.40 மணிக்கு முதல் விமானமாக இண்டிகோ விமானம் ஐதராபாத்திற்குப் புறப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு பயணிகள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
பெங்களூரு செல்வதற்காக வந்திருந்த சுனில் பஜாஜ் இது குறித்து கூறுகையில், “‘நான் நவிமும்பையில் இருக்கிறேன். விமானம் ஏறுவதாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்யவேண்டும். ஆனால் நவிமும்பை விமான நிலையத்திற்கு 15 நிமிடத்தில் வந்துவிட்டேன். விமான நிலையத்தைச் சுற்றி செய்யப்பட்டுள்ள கட்டமைப்பு வசதி மிகவும் சிறப்பாக இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.