முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தடை: தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் | Tamil Nadu government is ignoring Muruga devotees – Hindu Munnani condemns

1348827.jpg
Spread the love

சென்னை: “தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனின் திருவிழாவுக்கு அரசு எந்த ஏற்பாடும் முறையாக, முழுமையாக செய்வதில்லை. மேலும் பக்தர்கள் பாதுகாப்பில் கவனம் கொடுப்பதில்லை. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை தடை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். பல லட்சம் பக்தர்களுக்கு அரசு உணவளிக்க போவதில்லை. நல்ல எண்ணத்துடன் தருபவர்களை சட்டத்தை காட்டி மிரட்டுவது சரியான செயல் இல்லை” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தைப்பூசத் திருவிழாவுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செய்யவும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் அறுபடை வீடான முருகன் கோயிலுக்கு வருகை தருகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும். அதுபோல பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனி வழி அமைத்தும், ஒளிரும் குச்சியை அனைத்து பக்தர்களுக்கும் வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு முருக பக்தர்களை அலட்சியப்படுத்துகிறது.

முருக பக்தர்களின் கோடிக்கணக்கான காணிக்கை மற்றும் அவர்கள் வாங்கும் பொருட்களால் பல கோடி வருமானம் பார்க்கிறது தமிழக அரசு. ஆனால் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக்கூட செய்து தருவதில்லை என்பது மனிதாபிமானமற்ற செயல். கும்பமேளா நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி எத்தகைய சிறப்பான வசதிகளை செய்துள்ளது அந்த அரசு. இதன்மூலம் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். உலக அளவில் மக்கள் விருப்பத்துடன் வருகை தருவதைக் காண முடிகிறது.

ஆனால் தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனின் திருவிழாவுக்கு அரசு எந்த ஏற்பாடும் முறையாக, முழுமையாக செய்வதில்லை. மேலும் பக்தர்கள் பாதுகாப்பில் கவனம் கொடுப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும். பழனியில் பாதயாத்திரை சென்று திரும்பும் பக்தர்களுக்கு இலவச பஸ் வசதி செய்வதாக தற்போது செய்தியில் வந்து உள்ளது. அதனை முழுமையாக பயனடையும் வகையில் செய்ய வேண்டும். அதைவிடுத்து கண்துடைப்பு நாடகமாக இதனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

அதுமட்டுமல்லாது பாதயாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் திரும்பி செல்லத்தான் பேருந்தில் பயணிப்பாளர்கள். அதற்குத்தக்க பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இது வழக்கமான பேருந்து சேவை இல்லை என்பதை உணர்ந்து செயல்படுத்த அரசு கவனம் கொடுக்க வேண்டும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை தடை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். திருவிழாக்களில் அன்னதானம் வழங்குவது நேர்த்தி கடனாக தொன்றுதொட்டு நடைபெறுகிறது. அதனை உணவு பாதுகாப்பு என்ற பெயரில் தடுப்பது அநியாயம். இத்தகைய நற்பணி, வியாபாரம் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.

பல லட்சம் பக்தர்களுக்கு அரசு உணவளிக்க போவதில்லை. நல்ல எண்ணத்துடன் தருபவர்களை சட்டத்தை காட்டி மிரட்டுவது சரியான செயல் இல்லை. நமது நாட்டில் அன்னச்சத்திரம் வைத்து பசியாற்றுதல் என்ற வரலாறு உண்டு. அந்த வகையில் மக்களுக்கு சேவை செய்ய வருபவர்களை தடுப்பது கூடாது.எனவே வருகின்ற காலங்களில் நடைபெற இருக்கின்ற தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து ஆன்மிக விழாக்களுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்ய தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *