முல்லைபெரியாற்றில் புதியஅணை பரிசீலனை கூடாது

Mullai Periyar Dam
Spread the love

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மந்திரி பூபேந்தர் யாதவ்புக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெரியாற்றில் புதிய அணை

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு,உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு,உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது.புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்ட நடவடிக்கை

எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்.
இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் , மத்திய சுற்றுச்சூழல், வனத் துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்படும்.

பரிசீலனைக்கு எடுக்க கூடாது

எனவே, 28-.5.-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிடவும், எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் ,மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும்.
சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேனன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *