கூடலூர்: பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்களை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் 2 லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. கேரளாவின் வல்லக்கடவு வன சோதனைச் சாவடியில் இந்த லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கடந்த 3 நாட்களாக லாரிகள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன. முல்லை பெரியாறு அணையைப் பராமரிக்க விடாமல் தொடர்ந்து இடையூறு செய்வதாக தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், கேரள அரசைக் கண்டித்து தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப் பகுதியில், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் தலைமை வகித்தார். தலைவர் பொன். காட்சி கண்ணன், முதன்மைச் செயலாளர் சலேத், செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, குமுளியில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் ஊர்வலமாக கிளம்பினர். இதையடுத்து,
உத்தமபாளையம் டிஎஸ்பி செங்குட்டுவேலவன் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, கேரளாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
கட்டுமானப் பொருட்களை அணைக்குள் அனுமதிக்காவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று கூறிய விவசாயிகள், பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.