ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் ஹிந்துக்களை பிளவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று (அக். 9) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். காணொலி வழியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ”இஸ்லாமிய சமூகத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடு குறித்து காங்கிரஸ் பேசுவதில்லை. ஹிந்து மதத்தில் உள்ள ஜாதிக்களை குறித்து மட்டுமே பேசி வருகிறது. இதன்மூலம் ஹிந்துக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. வாக்கு அரசியலுக்காக வெறுப்பை பரப்புகிறது.
பிளவுபடுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திட்டத்தை காங்கிரஸ் எப்போதுமே பின்பற்றி வருகிறது.முஸ்லிம்களை எப்போதும் அச்ச உணர்வுடன் இருக்கச் செய்கிறது காங்கிரஸின் இயல்பு. அவர்களை தூண்டி விட்டு அதன்மூலம் முஸ்லிம்கள் வாக்குகளை பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
ஹிந்துக்களில் ஒரு ஜாதியைச் சேர்ந்தோர் இன்னொரு ஜாதியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கை. ஹிந்துக்கள் பிளவுபடும்போது, தங்களுக்கு பலன் கிடைக்குமென காங்கிரஸுக்கு தெரியும்.
ஹிந்து சமூகத்தை பதற்றமான நிலையில் வைத்துக்கொள்ளவே காங்கிரஸ் விரும்புகிறது. இதன்மூலம் அரசியல் லாபத்தை சம்பாதிக்க பார்க்கிறது.
இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும், காங்கிரஸ் இதே பாணியை பின்பற்றுகிறது. சநாதன தர்மத்தின் மீது அடக்குமுறையை ஏவுகிறது காங்கிரஸ்.
மக்களின் மனதில் ஒவ்வொரு நாளும் வெறுப்பை விதைக்கிறது காங்கிரஸ். இதைத் தெரிந்து கொண்ட மகாத்மா காந்தியடிகள், காங்கிரஸ் கட்சியை இந்திய விடுதலைக்குப் பின் கலைக்க நினைத்தார்.
நகர்ப்புற நக்ஸல்களின் அமைப்பாக திகழும் காங்கிரஸ், பொய்யான பிரசாரத்தை பரப்புகின்றது. இருப்பினும் மக்கள் அந்த பொய்களை அடையாளம் கண்டுவிட்டனர்” என்றார்.