முஸ்லிம் ஒருவர் மீது இந்து அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வழக்குப்பதிவு செய்தும் உண்மைக் காரணம் கண்டறியப்படவில்லை.
உத்தரப் பிரதேசத்தின் பிலிபித்தில் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த சங்கேஸ் கான் என்பவர் மீது ஒரு கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சங்கேஸ் கானின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிசத் இயக்கத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சஞ்சய் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து, சங்கேஸ் கானைத் தாக்கியதுடன், கத்தி மற்றும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரிடமும், அவர்கள் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, புரன்பூர் காவல் நிலையத்தில் பாரதிய நியாயா சன்ஹிதா, கொலை முயற்சி, குற்றவியல் மிரட்டல் முதலான பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதவிர, பெண் ஒருவரை சங்கேஸ் கான் பாலியல் வன்கொடுமை செய்ததால், அவர்மீதான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஒரு பெண்ணை துன்புறுத்திய சிலரை, சங்கேஸ் கான் தட்டிக் கேட்டதால்தான், அவர்மீது தாக்குதல் நடைபெற்றதாக சிலரும், சங்கேஸ் கான் ஒரு மொபைல் போனை திருடியதால், அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சிலரும் கூறுகின்றனர்.
இருப்பினும், தாக்குதல் குறித்த உண்மை நிலவரம் இதுவரையில் வெளிவரவில்லை.