மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல் | Reopen the Closed 207 Govt Schools: EPS Requested

1372973
Spread the love

சென்னை: மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 51 மாத முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி கல்வித் துறையை, சீரழித்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மூலம் நடத்தப்படும் கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், அதற்கு போதுமான ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் நியமிக்கப்படாததே காரணம் என்றும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக இந்த அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.

இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக் கேடானது. திமுக ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த அரசு கனகச்சிதமாக செய்து வருவதாகவும், அந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

எனது தலைமையிலான அரசு, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 60-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கு மடிக் கணினி, படித்த ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் என்று பல திட்டங்களை செயல்படுத்தி, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தது.

ஆனால், திமுக அரசோ, அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது. இச்செயலை, அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்து வரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *