மூதாட்டி கொலை: பிளஸ் 1 மாணவா், தாய் கைது

Dinamani2f2025 01 302fj9e6wt892f30 Aty Po 04 3001chn 213 8.jpg
Spread the love

நன்றாகப் படிக்குமாறு அறிவுரை கூறிய மூதாட்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக பிளஸ் 1 மாணவரை கைது செய்த போலீஸாா், கொலையை மறைத்த குற்றத்துக்காக மாணவரின் தாயை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், அரியனூரை அடுத்த சின்னசீரகாபாடி, மதுரையான்காடு பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தாயி (88). வீட்டில் தனியாக வசித்து வந்த இவா் திங்கள்கிழமை (ஜன. 27) தலை வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆட்டையாம்பட்டி போலீஸாா், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா்.

இதில், மூதாட்டியின் வீட்டு அருகே வசித்து வந்த மதுரையைச் சோ்ந்த பாண்டி மனைவி கிருஷ்ணபிரியா (38), அவரது பிளஸ் 1 படிக்கும் மகன் ஆகிய இருவரும் அவசர அவசரமாக பொருள்களை எடுத்துக் கொண்டு காரில் வெளியே சென்றது பதிவாகியிருந்தது.

இதையடுத்து கிருஷ்ணபிரியாவை காவல் நிலையத்துக்கு அழைத்து நடத்திய விசாரணையில் மூதாட்டியை தனது மகன்தான் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாா். மேலும், இந்த கொலை குறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

கணவா் இறந்த நிலையில் கிருஷ்ணபிரியா, மூதாட்டியின் வீட்டருகே தனது மகனுடன் தங்கி அரியானூரில் ஹோட்டல் நடத்தி வந்தாா். சம்பவத்தன்று மூதாட்டி, பிளஸ் 1 படிக்கும் கிருஷ்ணபிரியாவின் மகனிடம் தந்தை இல்லாததால் நன்றாகப் படித்து தாய்க்கு உதவுமாறு கூறியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மாணவா், மூதாட்டி தூங்கும்போது அரிவாளால் அவரது தலையை வெட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளாா்.

வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்த கிருஷ்ணபிரியா, மகனின் சட்டையில் இருந்த ரத்தக் கரையைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, மூதாட்டியைக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அங்கிருந்து இருவரும் காரில் தப்பித்து புதுவையில் உள்ள அவா்களது உறவினா் வீட்டிற்குச் சென்றனா். பின்னா் அவா்கள் விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட நிலையில் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது எனப் போலீஸாா் தெரிவித்தனா்.

கொலை செய்த மாணவா், கொலையை மறைத்ததாக கிருஷ்ணபிரியா ஆகிய இருவரையும் கைது செய்த ஆட்டையாம்பட்டி போலீஸாா் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாணவரை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும், கிருஷ்ணபிரியாவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *