மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலையில் உள்ஒதுக்கீடு: அரசு முடிவு எடுக்க 6 வார அவகாசம் | Government has 6 weeks to decide on reservation in education and jobs for third gender

1340827.jpg
Spread the love

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை நிவேதா தாக்கல் செய்த மனுவில், “2024-25-ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது. எனவே, கால்நடை மருத்துவப் படிப்பில் எனக்கு இடம் வழங்க வேண்டும்” என கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, திருநங்கை நிவேதா வரும் 25-ம் தேதி கால்நடை பல்கலைகழக பதிவாளரை சந்தித்து மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் எனவும், விண்ணப்பத்தை பெற்று மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக் கழகம் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

இதற்கிடையே, அரசு தரப்பில் முன்வைத்த வாதத்தில், “மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசின் 5 துறைகள் ஒப்புதல் வழங்கி உள்ளது. அனைத்து துறைகளின் ஒப்புதல் பெற்று கொள்கை முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இவ்வாறு மூன்றாம் பாலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க கொள்கை முடிவு எடுப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருவதால், இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்” என முறையிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு 6 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *