மூன்று நாள்கள் சுற்றுலாவுக்கு ஏற்ற மூணாறு!

Dinamani2f2024 08 212fr3odcfpt2fmunaru.jpeg
Spread the love

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை போர்த்திய மூணாறு, தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே ஒரு சில நாள்கள்.. சுத்தமான காற்று.. இந்த அவசர உலகை மறக்கவும், வாழ்வின் துயரை மறக்கவும் மருந்தாக உள்ளது.

விடுமுறையைக் கழிக்கச் சென்று அங்கே சில நாள்கள் தங்கியவர்கள், அந்த நாள்களை சொர்க்கம் என்றுதான் சொல்வார்கள். அதில் தவறொன்றும் இல்லை. சொந்த ஊர் திரும்பிய பிறகும், அவ்வப்போது தேயிலைத் தோட்டத்தின் நறுமணம் நம்மை சுற்றி சுற்றி வந்து கொல்லும். அதுவும் தவறில்லை.

இறவிக்குளம் தேசியப் பூங்கா

தமிழ்நாடு அரசின் தேசிய விலங்கான வரையாடுகளை இங்கு காணலாம், தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனைமுடி மலைச்சிகரம் இங்கு உள்ளது.

மாட்டுப்பட்டி அணை

மூணாறு வருபவர்கள் அதிகம் செல்லும் இடங்களில் ஒன்று மாட்டுப்பட்டி அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீருக்குப் பின்னணியில், அரணாக இருக்கும் மலைகளை ரசிக்கவே இங்கு நூற்றுக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நியமக்கடா எஸ்டேட்

மூணாறு மலையைச் சுற்றிலும் பற்றிப் படர்ந்துள்ள பண்ணையார் எஸ்டேட், லொக்கார்ட் எஸ்டேட், பள்ளிவாசல் எஸ்டேட், பெருங்கனல் எஸ்டேட், கண்ணன் தேவன் எஸ்டேட் உள்ளிட்ட தேயிலை எஸ்டேட்களில் இதுவும் ஒன்று. நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும் வாகான எழிலார்ந்த இடங்கள் பல இந்த எஸ்டேட் வளாகங்களில் உண்டு.

எக்கோ பாயிண்ட்

கொடைக்கானல் எதிரொலிப் பாறை போலத்தான் இதுவும். வண்டல் மண் படிந்த திட்டில் நின்றவாறு எதிரிலிருக்கும் அழகான ஏரியை அடுத்திருக்கும் சில்வர் ஓக் மரங்கள் நிறைந்த வனப்பகுதியை நோக்கி மனம் போன போக்கில் நாம் உரக்கக் கத்தினால் நமது குரல் காற்றில் மீண்டும் எதிரொலித்து நம்மைப் பரவசப் படுத்துகிறது. இது தவிர இங்கே சற்று ஷாப்பிங்கும் செய்யலாம். மரத்தாலான கைவினைப் பொருள்கள், பொம்மைகள், சாக்லேட்டுகள், உள்ளிட்டவை இங்கே கிடைக்கின்றன.

மலர்ப் பூங்கா

சமவெளியாக அன்றி மலைச்சரிவுகளில் அடுக்கு முறையில் மலர்ச்செடிகளை வளர்த்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இங்கு இல்லாத வண்ண மலர்களே இல்லை எனலாம். அத்தனை ரக, ரகமான நிறங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. வெண்மை நிற ரேடியோ பூக்கள் தொடங்கி மஞ்சள் நிற குறும்பூக்கள், வாடாமல்லி நிற திரள் பூக்கள், பல வண்ண ரோஜாக்கள், பன்னீர் மலர்கள், ஊதா நிற ஆர்க்கிட்டுகள் வரை எல்லாமும்… எல்லாமும் மனதையும் கண்களையும் ஒரு சேர குளிர்வித்து நிறைவிக்கின்றன. மூணாறு போய் வந்தால், ஒரு வருடத்துக்கு இங்கெடுக்கும் புகைப்படங்களே போதும் சமூக வலைதளப் பக்கங்களில் மாற்றுவதற்கு.

டாட்டா தேயிலை அருங்காட்சியகம்

இங்கு பிரிட்டிஷார் காலத்திலிருந்து மூணாறில் எவ்விதம் தேயிலை வர்த்தகம் நடந்து வருகிறது என்பதைக் காட்ட அருமையான புகைப்படக் கண்காட்சி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதோடு அந்தக் காலத்தில் பயன்படுத்தப் பட்ட தேயிலை எடைக் கருவிகள், மலையில் ஏற வியாபாரிகள் பயன்படுத்திய காலணிகள் உள்ளிட்டவற்றைக் கூட அங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். டீ எஸ்டேட்டின் உள்ளே ஃப்ரெஷ் ஆக தேயிலை பறிக்கப்பட்டு அதிலிருந்து விதம் விதமான டீத் தூள்கள் எவ்விதமாகத் தயாராகின்றன என்பதை டாக்குமெண்டரி திரைப்படமாகவே முழுதுமாகக் காட்டும் வசதியும் உண்டு. இதற்கு நுழைவுக் கட்டணம் உண்டு.

ராக் கேவ்

இந்த இடத்தைப் பற்றி ஒரு சுவாரஸியமான கதை உலவுகிறது. 1850 களின் இறுதியில் இந்தப் பிரதேசத்தில் ஒரு திருடன் இருந்ததாகவும். அவன் இந்த மலையைக் கடந்து செல்லும் வியாபாரிகள் மற்றும் மக்களிடமிருந்து பொருட்களையும், பணத்தையும் கொல்ளையடித்துக் கொண்டு சென்று மலையைச் சுற்றி வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அளிப்பது வழக்கம். ஆக மொத்தத்தில் அவனொரு நல்ல திருடன் என்றொரு கதை அங்கிருந்த தட்டியில் எழுதப் பட்டிருக்கிறது. மலையாளத்தில் இந்த குகையின் பெயர் மலையில் கள்ளன் குகா! உள்ளே டார்ச் இருந்தால் ஒழிய நம்மால் எட்டிப் பார்க்க முடியாது.

மூணாறு

யானைச் சவாரி

மூணாறு சுற்றுலாவில் பலருக்கும் பிடித்தமானதாக இருப்பது யானைச் சவாரியே! சமதளத்தில் இருந்து யானையில் ஏற்றிக் கொண்டு போய் மலை மேல் கால் கிலோமீட்டருக்கு குறைவின்றி ஒரு ரவுண்டு அழைத்துச் சென்று வந்து இறக்கி விடுகிறார்கள். மலை மேல் ஏறும் போது யானை கம்பீரமாக அசைந்தாடி நிதானமாக எட்டெடுத்து வைத்து நடக்க அதன் மீது அமர்ந்து பயணிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. சவாரியை முடித்ததும், யானைக்கு பழங்களை உணவாக அளிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. பலருக்கும் இது பிடித்தமானதாகவும், நம்மை சுமந்து செல்கிறதே என்று வருத்தத்தைப் போக்குவதாகவும் உள்ளது.

கொழுக்குமலை சூரிய உதயம்

பொதுவாக இதனைப் பார்க்க வேண்டும் என்றால் துணிவு இருக்க வேண்டும். ஆஃப் ரோடு என்கிறார்கள். இதைப் பார்த்த பிறகுதான், ஆஃப் ரோடு என்றால் என்ன என்பது புரிகிறது. சாலைகள் இருக்காது, மாறாக பாறாங்கற்கள் நிறைந்த பாதை இருக்கும். ஜீப்கள் மட்டும் இயங்குகின்றன. அதிகாலையில் சென்று கொழுக்குமலையில் ஒரு மணி நேரம் ஆஃப் ரோடில் பயணித்து மேலே சென்றால், அங்கு நம்மைக் காண சூரியன் உதயமாகிறார். இந்தியாவின் சிறந்த சூரிய உதயங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றிருக்கிறது இந்த கொழுக்குமலை. மீண்டும் ஆஃப் ரோட்டில் வர வேண்டும் என்று நினைக்கும்போதுதான் சற்று கலக்கமாக இருக்கலாம்.

மூணாறில் பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சீசனுக்கு ஏற்ப அவற்றில் தண்ணீர் கொட்டுகிறது. ஆனால் ஒன்று, எங்கே கால் வைத்தாலும், அங்கே ஓரிடத்தில் சல சல வென ஓடைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஓரிடத்தில் அவை நீர்வீழ்ச்சியாக மாறுகின்றன. கால்வாயாக பாய்கின்றன.

இப்படி பல இடங்கள் உள்ளன.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். மூணாறு என்றாலே தேயிலைத் தோட்டங்கள்தான். எங்குச் சென்றாலும் கண்கொள்ளாக் காட்சிகள்தான். அனைத்தையும் சேமித்து வர இந்த ஆயுள் போதாது.. நிச்சயம் ஊட்டி, கொடைக்கானல் செல்ல திட்டமிடுவோர், மூணாறையும் ரசிக்கலாம், ஏமாற்றாது.

சென்னை – மூணாறு செல்ல..

சென்னையிலிருந்து மூணாறு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று உடுமலைப்பேட்டை வழியாக, மற்றொன்று தேனி வழியாக போடி சென்று செல்லலாம்.

சிலர், சென்னையிலிருந்து கிளம்பும் போது கோயம்பத்தூர் வழியாகவும் மூணாறில் இருந்து திரும்பும் போது தேனி வழியாகவும் அல்லது மாற்றியும் பயணிப்பார்கள். காரணம் மூணாறில் காண வேண்டிய இடங்களில் பெரும்பாலானவற்றை இந்த பயண நேரத்தின் இடையிலும் பார்த்துவிடலாம் என்பதே. பெரும்பாலானோருக்கு மலை ஏறும்போது வாந்தி போன்ற அவதிகள் ஏற்படுகின்றன. அதை தவிர்க்க முடிவதில்லை என்கிறார்கள்.

முழுதாக மூணாறு மலைப்பகுதியை சுற்றிப் பார்த்து வர குறைந்த பட்சம் 5 நாள்களாவது தேவை. நின்று நிதானித்து ரசித்து மகிழ அங்கே நிறைய இடங்கள் உண்டு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *