மூன்றே நிமிடங்களில் முடிந்த நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்: நடந்தது என்ன? | Nellai Corporations Board Meeting which ended in 3 minutes

1276330.jpg
Spread the love

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) கூடியது. மேயர் சரவணன் பதவி விலகி இருக்கும் நிலையில், துணை மேயர் தலைமையில் நடந்த இன்றைய கூட்டம் மூன்றே நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

நெல்லை மாநகராட்சியில் மேயர் சரவணன் பதவி விலகியதை தொடர்ந்து துணை மேயர் ராஜ் தலைமையில் மாமன்றக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 34-ன் படி மாமன்ற தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார்.

இன்றைய கூட்டத்தில் அவரது பதவி விலகல் கடிதம் குறித்து மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, “மாமன்றக் கூட்டம் விரைவில் அறிவிக்கப்படும்” என பொறுப்பு மேயர் ராஜ் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்தில் வேறு அலுவல்கள், தீர்மானங்கள் ஏதும் எடுத்துக்கொள்ளப்படாமல் மூன்றே நிமிடத்தில் மாமன்றக் கூட்டம் முடிவடைந்தது.

பனிப்போர், ராஜினாமா, அடுத்தது என்ன?- திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணன் கடந்த வாரம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள் அனைவருமே முன்னாள் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் கவுன்சிலர் சீட் வாங்கியவர்கள். எனவே அவர்களில் பெரும்பாலானோர் தற்போது வரை அவருக்கு விசுவாசமாகவே இருந்து வருகின்றனர். மேயர் சரவணனும் அப்துல் வகாப் மூலமே கவுன்சிலராகவும் வாய்ப்பை பெற்றார். சரவணன் மேயரானதில் இருந்து அவருக்கும் அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

இவர்களுடைய மோதல் போக்கால் திருநெல்வேலி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் முடங்கியிருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் நிலவிய பிரச்சினைக்கு முடிவுகட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இரு தரப்பினரிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை தீரவில்லை.

இந்நிலையில், மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி கடிதம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதனால் சரவணனின் மேயர் பதவி தப்பியது. ஆனாலும் நீறுபூத்த நெருப்பாக பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது.

தொடர்ச்சியாக திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே நிலவிய பனிப்போர் எதிரொலியாக மேயர் பதவியிலிருந்து சரவணன் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) கூடிய நெல்லை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மூன்றே நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. பொறுப்பு மேயர் ராஜ் தலைமையில் இனியாவது மாமன்றத்தில் மக்கள் பணிகள் வேகமெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *