சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது ஊழல் கண்காணிப்புக்கான நாட்டின் உச்ச அமைப்பாக மத்திய கண்காணிப்புக் குழு உள்ளது.
இந்த குழு சார்பில், பொது வாழ்வில் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டும் ஊழல் கண்காணிப்பு விழுப்புணர்வு வாரம் தொடங்கி நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்பு விழுப்புணர்வு வாரம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த விழுப்புணர்வு வாரம் நவ.2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வு, “விழிப்புணர்வு: நமது கூட்டுப் பொறுப்பு” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி (நிதி), மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்பு, ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றனர். ஊழல் கண்காணிப்பின் முக்கியத்துவம் குறித்து ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த வாரம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.