சென்னை: வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகனும், அவரது பெண் தோழியான மயிலாப்பூர் தனலட்சுமியும் சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் காரை நிறுத்தி வைத்திருந்தனர். அந்த காரை எடுக்கும்படி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸார் கூறியதால், இருவரும் போலீஸாரை ஆபாசமாக திட்டி அத்துமீறி நடந்து கொண்டனர்.
இதையடுத்து, மயிலாப்பூர் போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே, தனலட்சுமி தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சந்திரமோகனும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், போலீஸார் தன்னையும், தனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பெண் தோழியிடம் தவறாக நடந்து கொண்டதால் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முதன்மை நீதிபதி எஸ்.கார்த்திக்கேயன் முன்பாக நடந்தது. காவல்துறை தரப்பில் பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி ஜாமீன் தரக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 28-க்கு தள்ளி வைத்துள்ளார்.