மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு கண் பார்வை இழந்த இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு | Rs 5 lakh compensation to youth who lost one eye in Marina Jallikattu protest

1354933.jpg
Spread the love

சென்னை: மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீஸாரின் தாக்குதலில் ஒரு கண் பார்வை இழந்த இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த விமலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜன.17 முதல் ஜன.23 வரை இளைஞர்கள் திரண்டு தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 2017 ஜன.23 அன்று பிற்பகல் 3 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

நாங்கள் குடியிருந்த பகுதியிலும் போலீஸார் இளைஞர்களை துரத்திக்கொண்டு வந்தனர். இதனால் பயந்துபோன நானும், எனது மகன் கார்த்திக்கும் (24) வீட்டுக்குள் சென்று கதவைப்பூட்டிக் கொண்டோம். அப்போது வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு அத்துமீறி எங்களது வீட்டில் நுழைந்த போலீஸார் என்னையும், எனது மகனையும் வெளியே இழுத்துக்கொண்டு வந்து சரமாரியாக தாக்கினர். எனது மகனை லத்தியால் தாக்கியதில் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீஸாரின் கொடூர தாக்குதலால் அவனது இடது கண் பார்வை பறிபோய் விட்டது. எனவே, எனது மகனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், “போராட்டக்காரர்கள் கல் வீசியதால் தான் மனுதாரரின் மகனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸாரின் தாக்குதலால் பார்வை இழப்பு ஏற்படவில்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதி, ‘இடது கண்ணில் பார்வையிழந்த மனுதாரரின் மகனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *