சென்னை: மெரினா லூப் சாலை மேற்கு பகுதியில் மீன் விற்க அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதாக நொச்சிக்குப்பம் மீனவர்கள் அறிவித்தனர்.
சென்னை, மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில், லூப் சாலை மீனவர்களில் ஒரு பகுதியினருக்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சந்தையில் கடைகள் வழங்கப்பட்டன. மற்றொரு பகுதியினருக்கு கடைகள் ஒதுக்காத நிலையில், அப்பகுதியில் வியாபாரம் செய்யத் தடையும் விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த 21-ம் தேதி முதல் நொச்சிக்குப்பம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்களுக்கு லூப் சாலை மேற்கு பகுதியில் மீன் விற்க அனுமதி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மயிலை நொச்சிக்குப்பம் மீனவர் கிராம சபையில் தீர்மானமும் நிறைவேற்றியிருந்தனர்.
மீனவர்களின் வேலைநிறுத்தம் நேற்றுடன் 4-வது நாளை எட்டியிருந்த நிலையில், அவர்கள் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள், “மீன் விற்க அனுமதி, சாந்தோம் நெடுஞ்சாலையை குடியிருப்புகள் பாதிக்காதவாறு விரிவுபடுத்த வேண்டும்.
மெட்ரோ பணிகள் முடிவடைந்ததால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்ட காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பை மீண்டும் இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஃபோக்கஸ் விளக்குகளை இறக்கிக் கட்ட வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக லூப் சாலைக்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் ஃபோக்கஸ் விளக்குகளை இறக்கிக் கட்டுவது, லூப் சாலையின் மேற்கு பகுதியில் மீன் விற்பதற்கான ஏற்பாடுகள் போன்றவற்றை செய்து கொடுத்தனர்.
குறிப்பாக, ஃபைபர் படகுகளில் மீன்பிடிப்போர் அன்று பிடித்து வரும் மீன்களை மட்டும் அங்கு விற்கலாம்; ஐஸ் மீன்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் மீன் விற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று மீனவர்கள் இன்று (அக்.25) முதல் மீன்பிடிக்கச் செல்வதாக அறிவித்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனிடம் கேட்டபோது, “மீனவர்கள் வலையில் பிடித்து வரும் மீன்களை, மீன் அங்காடிக்கு வெளியே விற்க அனுமதிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறோம். உயர்மட்ட அளவிலான முடிவு விரைவில் எடுக்கப்படும்” என்றார்.