இது குறித்துப் பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, “மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு பாலைவனமாகிவிடும், இதனால் மேகதாது அணை கட்ட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. இதனால் ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி பிரச்னையை தீர்க்கலாம்.
அதேபோல் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை தமிழக அரசு கவனக்குறைவாக அனுப்பி இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை சமர்பிக்கும் போது, 2011 மக்கள் தொகையை திமுக குறிப்பிட்டது ஏன்? 2025ஆம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டிருந்தால், ஒப்புதல் கிடைத்திருக்கும். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின், மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
கோவை, மதுரை திட்டத்தில் மாநில அரசு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு மோசமாக உள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதற்கு காரணமே நிரந்தர டிஜிபியை நியமிக்காதது தான். நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது” என்று திமுகவைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்.