மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து; 18 உடல்கள் மீட்பு; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

Spread the love

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியின் மைன்ஸ்ங்காட்–தாங்ஸ்காய் பகுதியில் அங்கீகரிக்கப்படாத நிலக்கரிச் சுரங்கம் ஒன்று செயல்பட்டுவந்திருக்கிறது.

இந்தச் சுரங்கத்தில் நேற்று அதிகாலை தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இரவு வரை மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தச் சம்பவம் குறித்து பேசிய விகஷ் குமார், “மீட்புப் பணியின் போது இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயமடைந்த ஒரு தொழிலாளி மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்” என்றார்.

இந்த விபத்து ‘எலி வளைச் சுரங்கம்’ (Rat-hole mining) எனப்படும் ஆபத்தான முறையால் ஏற்பட்டுள்ளது. நிலக்கரியைப் பிரித்தெடுக்க வெறும் 3 முதல் 4 அடி உயரமே கொண்ட குறுகிய குகைகளைத் தோண்டும் இம்முறை, மேகாலயாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறுகிய லாபத்திற்காக இந்த விதிகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, சட்டவிரோதச் சுரங்க உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

2014-ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) மேகாலயாவில் ‘எலி வளைச் சுரங்கம்’ என்ற இம்முறைக்குத் தடை விதித்தது. 2019-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி பி.பி. கடகேய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து
சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து

அந்தக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு, “ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை விற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், புதிய நிலக்கரியைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்து பழைய கையிருப்பு என ஏமாற்றி விற்பனை செய்வதற்கு இந்த உத்தரவுகள் ஓட்டைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன” எனத் தன் அறிக்கையில் நீதிபதி கடகேய் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறை, இந்தச் சட்டவிரோத சுரங்கப் பின்னணியில் இருப்பவர்கள் குறித்த தகவல்களைத் தருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *