நம்புவீர்களா? அஜீத் படத்தில், ஹீரோ என்று யாருமே இல்லை. எல்லோரும் கெட்டவர்கள். அதிலும் அஜீத் அநியாயத்துக்குக் கெட்டவர். சமூகத்துக்கு நல்லது செய்யும் மாஸ் ஹீரோ படங்களின் ‘கோல்டன் ரூல்’ விதியை உடைத்ததற்கு வெங்கட் பிரபுவுக்கு ஒரு வெல்டன்!
ஆன்ட்டி ஹீரோவாகக்கூட அல்ல… முழு வில்லனாகவே அஜீத். தாடி, முடியில் நரையுடன் ”மே வந்தா எனக்கு 40 வயசாகுது” என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுப்பது, படுக்கையில் இரவைக் கழித்த லட்சுமி ராயிடம் ”நீ யார்? எதுவும் தப்பா நடந்துக்கிட்டேனா?” என்று அப்பாவியாகக் கேட்பது, காதலியின் அப்பாவை ஓடும் காரில் இருந்து தள்ளிவிடுவது, பண வெறியில் நண்பர்களை டப் டுப் என்று சுட்டுக் கொல்வது, சகட்டுமேனிக்குக் கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிப்பது என துவம்ச உற்சவம் நடத்தி இருக்கிறார். ஸ்க்ரீனில் தோன்றும் சமயம் எல்லாம் லாஜிக் மறந்து ‘ஒன் மேன் ஷோ மேஜிக்’கில் அசரவைக்கிறார் அஜீத்!
சின்சியர் ஆபீஸர் என்ற பழகிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக ஃபிட் ஆகிறார் அர்ஜுன். த்ரிஷா (தம்துண்டு கேரக்டருங்கோ!) அளவாக, அழகாக இருக்கிறார்… அவ்வளவே! படத்தில் அஞ்சலி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் ஆகியோர் இருக்கிறார்கள். அஜீத் ஓட்டும் ஸ்விஃப்ட் கார்கூடப் படத்தில் இவர்களைவிட அதிகத் திருப்பத்தில் பங்கெடுக்கிறது!