மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை: பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு  | Heavy rains in Mettupalayam area

1334645.jpg
Spread the love

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரப் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சியின் 33-வது வார்டு நடூர் முனியப்பன் கோயில் வீதியில் இடியும் நிலையில் இருந்த பயன்படுத்தப்படாத வீட்டுக் கட்டிடம் தொடர் மழையால் தாக்குப்பிடிக்க முடியாமல் இன்று (நவ.3) அதிகாலை இடிந்து விழுந்தது. அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டன. அதேபோல், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக, மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை உள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகள் மற்றும் கேரளா காடுகளில் பெய்யும் மழைநீர் ஆகியவை நீராதாரமாக பில்லூர் அணைக்கு உள்ளது. பில்லூர் அணையை நம்பி 15-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மலைக்காடுகள் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பில்லூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி ஆகும். 97 அடியை நெருங்கினாலே அணை நிரம்பியதாக கருதப்படும். நேற்று (நவ.2) இரவு பில்லூர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக இருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக இன்று (நவ.3) 91 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே நாளில் பில்லூர் அணையின் நீர்மட்டம் 9 அடி உயர்ந்துள்ளது. நீர்மின் உற்பத்திக்காக அணையில் இருந்து இன்று விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *