மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி: சேலத்தில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்! | Veerappan daughter contests in Mettur Seeman announces candidates for 6 seats in Salem

1380302
Spread the love

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். மேட்டூர் தொகுதிக்கு வீரப்பன் மகள் வித்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சேலம் மாவட்டம் மேட்டூரில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ‘வீரபெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய சீமான், “நாட்டை ஆளுகிற ஆட்சியாளர்கள், வெகுவான மக்கள் பார்வையிலே வீரப்பன் ஒரு கொள்ளைக்காரன், திருடன் சந்தன மரத்தை கடத்தியவன். உண்மையிலேயே வீரப்பன் வனக்காவலன். வீரப்பன் திருடன் என்றால் அவர்கள் திருடிய சொத்துக்கள் எங்கே? அவருடைய மாளிகைகள் எங்கே?.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கும், நடிகனை பார்க்கச் சென்று உயிரிழந்தவர்களுக்கும் இந்த அரசு பணத்தையும் வேலையும் கொடுக்கிறது. ஆனால் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தைப் பார்க்க நாதியில்லை. வனத்தில் கால்நடைகளை மேய்ப்பதால் வனவிலங்குகளுக்கு ஆபத்து எனக் கூறுபவர்களுக்கு, குவாரிகள் வெட்டி எடுப்பதால் ஆபத்து இல்லையா?.

நிறைய தேர்தல்களில் நாங்கள் தோற்று இருக்கிறோம். தேர்தலில் வெற்றி மட்டுமே வெற்றி அல்ல. தேர்தலில் வென்றவன் சாதித்ததை விட தேர்தலில் தோற்ற எங்கள் பிள்ளைகள் சாதித்து இருக்கின்றோம். நான் நினைத்தால் பணத்தை வாங்கிக் கொண்டு சீட்டு கொடுக்க முடியும். அதை செய்கிறவனாக இருந்தால் இந்த இடத்தில் நின்று தீரனும் அவன் பேரனும் என்று பேச மாட்டேன். சிஎம் சார் என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று சீரியசாக காமெடி செய்கிறார்கள். 8 வழிச் சாலை, பரந்தூர் விமான நிலையம் கட்டுங்கள் பார்ப்போம், சாகத் துணிந்தவனுக்கு எல்லாம் சாதாரணம்” என்றார்

சேலத்தில் 6 தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சி சார்பில் வரும் 2026 தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் வீரப்பனின் மகள் வித்யா வீரப்பன், சங்ககிரி தொகுதியில் நித்யா அருண், வீரபாண்டி தொகுதியில் ராஜேஷ் குமார், சேலம் மேற்கு தொகுதியில் சுரேஷ்குமார், கெங்கவல்லி தொகுதியில் அபிராமி, ஆத்தூர் தொகுதியில் மோனிஷா ஆகியோர்கள் போட்டியிடுவார்கள் என சீமான் அறிவித்தார்.

பிப்ரவரி 7-ம் தேதி திருச்சியில் நடைபெறும் இன எழுச்சி மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளதாகவும், தற்போது அறிவித்த வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் சீமான் கேட்டுக்கொண்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *