மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் 1.50 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரளம் மாநிலங்களில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் மழையின் காரணமாக 65 அடி உயரம் கொண்ட கபினியின் நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அங்கிருந்து கனிசமாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினியிலிருந்து திறக்கப்பட்ட நீர் மற்றும் மழை நீர் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கடந்த மூன்று நாள்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,341 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 4,521 கன அடியாக அதிகரித்து வருவதால் அணையின் நீரமட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடகியுள்ளது.
குடிநீர் தேவைகளுக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை 40.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 41.15 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 12.69 டிஎம்சியாக உள்ளது.
கடந்த 3 ஆம் தேதி 39.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 41.15 அடியாக உயர்ந்துள்ளது கடந்த ஒரு வாரத்தில் அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.