மேட்டூர் / தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 42,167 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 23,648 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் வெளியேற்றத்தைவிட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 116.85 அடியாக இருந்த நிலையில் நேற்று 117.46 அடியாகவும், நீர் இருப்பு 88.53 டிஎம்சியிலிருந்து 89.47 டிஎம்சியாகவும் அதிகரித்துள்ளது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்து அளவை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 12-ம் தேதி காலை விநாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக பதிவான நீர்வரத்து இரவு 8 மணியளவில் 32 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று முன்தினம் காலை 24 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 4 மணியளவில் 20 ஆயிரம் கனஅடியாகவும் படிப்படியாக குறைந்தது. நேற்று மாலை 6 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.