மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 1,18,296 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து இதே அளவு தொடர்ந்து நீடித்தால் நான்கு நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர் இருப்பு 63.69 டிஎம்சியாக இருந்த நிலையில், 67.06 டிஎம்சியாக உயர்ந்தது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்றிரவு விநாடிக்கு 81,552 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 93,828 கனஅடியாகவும், மதியம் 1,18,009 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 1,18,296 கனஅடியாகவும் உயர்ந்தது.
அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணியளவில் 99.11 கனஅடியாக இருந்த நிலையில், காலை 9 மணிக்கு 100 அடியை எட்டியது. அணையின் 16 கண் மதகை நீர் தொட்டுள்ளது. இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்து, காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்தனர். மேலும், மலர்கள் தூவி காவிரி நீரை வணங்கி வரவேற்றனர். அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர் திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.11 அடியாக இருந்த நிலையில், மாலை 101.70 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 63.69 டிஎம்சியாக இருந்த நிலையில், 67.06 டிஎம்சியாக உயர்ந்தது. கடந்த 12 நாட்களில் அணையின் நீர்மட்டம் 58.48 அடியும், நீர் இருப்பு 53.26 டிஎம்சியும் உயர்ந்துள்ளது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து விரைவில் நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், நீர்வளத் துறை அதிகாரிகள், 16 கண் மதகு, வலது கரை, இடது கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: மத்திய நீர்வள ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு 1.45 லட்சம் கன அடி நீர் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரைகளில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படியும், ஆற்றில் படகு இயக்கவோ, மீன் பிடிக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ யாரும் செல்லக் கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “அணையின் மொத்த நீர் இருப்பு 93 டிஎம்சியாகும். தற்போது, 67 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில், அணை நிரம்ப இன்னும் 26 டிஎம்சி தண்ணீர் தேவை. அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளது. பிலிகுண்டுலு பகுதிக்கு நீர்வரத்து இன்று மாலை 1.30 லட்சம் கன அடியாக உள்ளது. தற்போது, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவானது, தொடரும் பட்சத்தில் 3 அல்லது 4 நாட்களில் அணை நிரம்புவதற்கான வாய்ப்புள்ளது” என்றனர்.