ஒரு பெரிய அணையின் வெற்றிக்கு, இடத்தேர்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு அடி உயரத்திற்கு எவ்வளவு நீரைச் சேமிக்க முடியும், அடித்தள பாறைகளின் வலிமை, உபரி நீர் வெளியேற வசதி, கட்டுமானப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து வசதி… இவை அனைத்தும் ஒரு பொறியாளர் கவனிக்க வேண்டிய அடிப்படை அம்சங்களாகும். இந்தக் காரணிகளை கருத்தில் கொண்டு, மேட்டூர் அணை அமைந்த இடத்தை `கர்னல் எல்லீஸ்” அறிவுபூர்வமாக தேர்வு செய்தார்.
ஒரு நீர்த் தேக்கமானது நல்ல உயரத்திலும், அதே சமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஓரளவு தேவையான கொள்ளும் வசதி உடைய நீள அகலங்களும், அதிக வெள்ளம் ஏற்படும் காலங்களில் உபரி நீர் தனியாக வழிந்தோடி அணைக்கு பாதிப்பு ஏற்படாமலும் இருப்பது (முக்கியமாக பேசின் வடிவில் இருப்பது) மிகவும் முக்கிய தேவையாக கருதப்பட்டது.
ஒகேனக்கல் அருவியிலிருந்து 15 மைல் நீளப் பகுதி மிகக் குறுகிய பள்ளத்தாக்கு கொண்டதால், பெரிய அணைக்குச் சாத்தியம் இல்லை. மேட்டூர் அருகிலுள்ள காவேரிபுரம் – சாம்பள்ளி இடையே பரந்த நிலப்பரப்பு காணப்பட்டது. அங்கிருந்து நெரிஞ்சிப்பேட்டை என்ற இடம் வரை நீளமான பள்ளத்தாக்கு பேசின் போல விரிந்து கிடந்தது. இதனால் சாம்பள்ளி மற்றும் ஊராட்சி கோட்டைக்கு இடையே அணை கட்டும் யோசனை வந்தது.
அணை கட்ட 1910 க்கு முன்பு தேர்வு செய்யப்பட்டு பரிசீலனையில் இருந்த முக்கிய இடங்கள்:
1. ஊராட்சி கோட்டை
2. நெரிஞ்சிப்பேட்டை
3. நவப்பட்டி
4. சாம்பள்ளி (A, B, C, D என்று குறியிட்ட இடங்கள்)