மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடி!

Dinamani2f2024 072f6cbac9b3 Afa5 4b24 A3d5 36ca4b71a7da2fmetturdam1.jpg
Spread the love

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகள் பெய்து வரும் கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி அணைகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வறண்ட குட்டை போல காணப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. நேற்று பிற்பகலில் மேட்டூர் அணை நீர்மட்டம் 109.20 அடியாக உயர்ந்தது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 10 மணிக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்.

மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் எந்நேரமும் அணையில் இருந்து உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக உபரி நீர் திறக்கப்படலாம். இதனால் உபரி நீர் போக்கிப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த் துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 107.69அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 116.36அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 8.67 அடி உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,53,091 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 87.78 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால் அணையைக் காண சேலம் தருமபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனால் புது பாலம் மற்றும் 16 கண் பாலம் பகுதிகளில் புதிய கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் களைகட்டி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *