மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,374 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஏற்கெனவே 6 முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இந்நிலையில், காவிரியில் நீர்வரத்து குறைந்தது, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,026 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,374 கனஅடியாக அதிகரித்தது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை குறைந்தது. எனவே, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் 118.55 அடியில் இருந்து 119 அடியாகவும், நீர் இருப்பு 91.17 டிஎம்சியில் இருந்து 91.88 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் 7-வது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், நீர்வளத் துறை அதிகாரிகள், அணையின் 16 கண் மதகு பகுதியில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் நீரின் அளவைக் கண்காணித்து வருகின்றனர்.