மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Mettur dam reached full capacity

1288143.jpg
Spread the love

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து, காவிரியில் 81,500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 16-ம் தேதி முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அப்போது 43 அடியாக இருந்த அணை நீர்மட்டம், கடந்த 27-ம் தேதி 100 அடியை 71-வது முறையாக எட்டியது. இதையடுத்து, டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், நேற்று மாலை 6 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் 43-வது முறையாக நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.

இதையடுத்து, எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, மேட்டூர் அணையின் உபரி நீர், மதகுகள் வழியாகவெளியேற்றப்பட்டது. 16 கண் மதகுகள் வழியாக, விநாடிக்கு 60,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 டிசம்பர் 29-ம் தேதிஅணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அதன் பின்னர், நேற்று மீண்டும் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதை அறிந்த சுற்றுவட்டார மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் சென்றதை பார்த்து ரசித்தனர்.

பாசனத்துக்கு 21,500 கனஅடி: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ம் தேதி விநாடிக்கு 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், நேற்று முன்தினம் முதல் 23,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை முதல் 21,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நேற்று இரவு விநாடிக்கு 66,454 கன அடியாக நீர்வரத்து இருந்தது. நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது. 16 கண் மதகுகள் வழியாக 60,000 கனஅடியும், நீர்மின் நிலையம் வழியாக 21,500 கனஅடியும் என மொத்தமாக 81,500கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் 137 நாட்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்றுமாலை 4.30 மணிக்கு மேட்டூர்அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் விநாடிக்கு 250 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அதிகரித்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

ஒகேனக்கல்லில்… ஒகேனக்கல் காவிரி ஆற்றில்நேற்று முன்தினம் மாலை 6 மணிஅளவீட்டின்போது விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்தநீர்வரத்து நேற்று காலை 6 மணிக்கு24 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

காலை 8 மணி அளவில் விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நீர்வரத்து மாலை 3 மணிஅளவில் விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக மேலும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *