மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. நீர்வரத்து வினாடிக்கு 93,828 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் அணைகளுக்கு வரும் நீர் முழுமையாக காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 93,828 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அணையின் நீர்மட்டம் 99.11 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 63.69 டிஎம்சியாக உள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ளிக்கிழமை காலை 92.62 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 99.11 கன அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 6.49 அடி உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100.29 அடியாக இருந்தது 18 ஆம் தேதி காலை 99.64 அடியாக சரிந்தது. அதன் பிறகு சனிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அணையின் நீர்மட்டம் 100 அடியை ஏற்கும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.