சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இன்று மாலை நேரிட்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.
மேட்டூர் அனல்மின் நிலையத்துக்குள் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விபத்தின் போது, சம்பவப் பகுதியில் இருந்த மேலும் இரண்டு தொழிலாளர்களின் நிலை என்ன ஆனது என்று தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் தெரிய வரவில்லை.
இந்த விபத்து எவ்வாறு நேரிட்டது என்பது குறித்து முதற்கட்ட விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதியில் திடீரென புகை வந்ததைத் தொடர்ந்து, அங்கு சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.