மேட்டூர் சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்து வடமாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயம் | Two injured in acid tank explosion at Mettur sidco factory

Spread the love

Last Updated : 25 Oct, 2025 11:51 AM

Published : 25 Oct 2025 11:51 AM
Last Updated : 25 Oct 2025 11:51 AM

மேட்டூர்: மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்சாலையில் ஆசிட் தொட்டி வெடித்ததில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேட்டூர் அருகே கருமலை கூடல் சிட்கோ தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட ரசாயணம், பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்பேட்டையில் சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (30) என்பவர் மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதனிடையே, தொழிற்சாலையில் மெக்னீசியம் அரைக்கும் தொட்டி பழுதடைந்து இருந்ததை, சரி செய்யும் பணியில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஆசிட் தொட்டி வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஸ் ராம் (38), சர்வன் பஸ்வான் (38) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அப்போது, பணியில் இருந்த சக தொழிலாளர்கள் காயமடைந்த இருவரை மீட்டு, இரு சக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தொழிற்சாலையில் தீ எரிந்த இடத்தை தண்ணீர் அடித்து அணைத்தனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் பெரும்பாலான பகுதிகள் சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற கருமலைக்கூடல் போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், மெக்னீசியம் சல்பேட் தயாரிக்கும் தொட்டியில் 4 டன் அளவுக்கு மெக்னீசியம் ஆக்சைடு கலந்த மண் மற்றும் சல்ஃபுரிக் ஆசிட் சேர்த்து வைத்துள்ளனர். அப்போது, தொட்டிக்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட பாதிப்பை தீயில் காட்டி சரிசெய்யும் போது ஆசிட் தொட்டி வெடித்துள்ளதாக கூறப்படுகிறது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *