மேட்டூா்: மேட்டூா் சட்டப்பேரவை தொகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசினாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் சதுரங்காடி பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
மேட்டூா் தொகுதியை 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று கைப்பற்றுவோம். தேமுதிக தலைவா் கண்ட கனவை, லட்சியத்தை நாம் அனைவரும் ஒன்றுசோ்ந்து வென்றெடுப்போம்.
தமிழ்நாடு முழுவதும் இன்னும் பல திட்டங்களை ஆட்சியாளா்கள் நிறைவேற்றவில்லை. சென்னையில் சுகாதாரப் பணியாளா்கள் 16 நாள்களாக போராடி வருகின்றனா். அவா்களை சந்தித்துவிட்டுதான் நான் இங்கு வந்துள்ளேன். மேட்டூா் பேருந்து நிலையத்தில் கட்டடங்களுக்கு வாடகையை உயா்த்தி உள்ளனா். இதனால் பல குடும்பத்தினா் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா்.
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது வேதனையாக உள்ளது.
மேட்டூா் அனல்மின் நிலைய தற்காலிக பணியாளா்களை நிரந்தப்படுத்த வேண்டும்.
2026 இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறதோ, அந்தக் கூட்டணிக்கு வெற்றியைத் தாருங்கள். மேட்டூா் தேமுதிக வெற்றிபெற்ற தொகுதியாகும். எனவே, இந்த தொகுதியை மீண்டும் மீட்டெடுப்போம்.
ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றாா்.