நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவில் முள்ளு குரும்பர், பெட்டக் குரும்பர், ஆலுக்குரும்பர் ஆகிய மூன்று பிரிவினர் உள்ளனர்.
குரும்பர் பழங்குடியினர் பெரும்பாலும் கூடலூர் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அருகிலுள்ள பொக்கபுரம், குரும்பாடி போன்ற பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர். இம்மக்கள் வேளாண்மை, காட்டுப் பொருள்கள் சேகரித்தல், காடு சார்ந்த பொருள்களை பயன்படுத்தி கைவினைப் பொருள்கள் தயாரித்தல், கால்நடை வளர்ப்பு போன்ற இயற்கை சார்ந்த தொழில்களே செய்து வருகின்றனர்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயதேயான ரவிக்குமார் பெட்டக்குரும்பர் இனத்தின் முதல் புகைப்படக் கலைஞராகியிருக்கிறார்.
ரவிக்குமாருக்கு வாழ்த்துகள் தெரிவித்து அவரோடு அமர்ந்து உரையாடத் தொடங்கினோம்,
“என் குடும்பத்தில் மொத்தம் என்னுடன் பிறந்தவர்கள் 5 பேர். நான் நான்காவதாக பிறந்தவன். எனக்கு ஆரம்பத்தில் புகைப்படங்கள் மீதெல்லாம் ஆர்வம் கிடையாது. அரசுத் துறையில் சேர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தனியார் தேர்வு மையங்களில் சேர்ந்து போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தேன். என்னுடைய இளங்கலை பட்ட படிப்பை நான் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் முடித்தேன் . அந்த கல்லூரி படிப்பையும் நிறைய குடும்ப பிரச்னை, பொருளாதார பிரச்னைகளைக் கடந்து தான் படித்து முடிச்சேன்.