மேப்பாடி பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள நிவாரண முகாமில் இருக்கும் மக்களை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் இன்று சந்தித்தார்.
கேரளத்தின் வயநாட்டில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மண்ணில் புதையுண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ராணுவம் மீட்டுள்ளனர்.
200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட பிற முகமைகள் கூட்டாக ஒன்றிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில், கேரள மாநில வயநாடு மாவட்டத்தில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க இன்று கேரளம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேப்பாடி மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு ஆறுதல் கூறினார் ராகுல். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு தங்கியிருப்பவர்களையும் சந்தித்தார்.
இதையடுத்து மேப்பாடி பஞ்சாயத்து அலுவலகத்தில் ராகுலும், பிரியங்காவும் அங்கு தங்கியுள்ள மக்களைச் சந்தித்து வருகின்றனர்.