மேம்​பால கட்​டு​மான பணிக்​காக நாளை முதல் 3 நாட்​களுக்கு தேனாம்​பேட்டை முதல் சைதாப்​பேட்டை வரை போக்​கு​வரத்து மாற்​றம் | Teynampet to Saidapet Traffic diversion for 3 days

1358650.jpg
Spread the love

சென்னை: ஜிஎஸ்டி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் நாளை (20-ம் தேதி) முதல் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணா சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும். அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

ஜி.கே.எம். பாலம் செனடாப் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். மேலும் காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல், ரத்னா நகர் பிரதான சாலை செனடாப் சாலையிலிருந்து ஒரு வழி பாதையாக இருக்கும். அண்ணா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.

மேலும் அண்ணா சாலையிலிருந்து செனடாப் 1-வது தெருவிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் செனடாப் 1-வது பிரதான சாலையிலிருந்து செல்ல அனுமதியில்லை.

கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்படும். அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம். பாலம் சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணா சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அண்ணா சாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்படும். இவ்வாறு போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *