மதுரை மாநகராட்சியில் திமுக 67 கவுன்சிலர்களை பெற்றிருந்தும், மேயர், மண்டலத் தலைவர்களை நியமனம் செய்யப்படாதது திமுக – மார்க்சிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் இடையே நிர்வாக ரீதியாக திரைமறைவு அதிகார மோதலை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டதால் மேயர் இந்திராணி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 5 மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். மேயர் இல்லாததால் இயல்பாகவே துணை மேயர் நாகராஜன், மேயர் (பொ) என்ற பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், ஆளும் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி அங்கம் வகிப்பதால் துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி நிர்வாகத்திடம் தான்தான் மேயர்(பொ) என்று கேட்க முடியாமலும், அவருக்கு மேயருக்குரிய அதிகாரத்தை மாவட்ட ஆளும்கட்சி அதிகார மையங்கள் விட்டுக் கொடுக்காமலும் உள்ளனர்.
அதனால், 100 வார்டுகளிலும் இரு கட்சி நிர்வாகிகளும், அதன் கவுன்சிலர்களும் திரைமறைவு அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளனர். மேயர் இல்லாததால் அவரது இடத்தில் துணைமேயர் நாகராஜன் தங்கள் வார்டுகளில் வந்து மக்கள் குறை கேட்பது, ஆய்வு செய்வதையும் திமுக கவுன்சிலர்கள் விரும்பவில்லை. இந்த நேரத்தில் திமுகவுடன் மோதினால், அது சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி விடும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் அடக்கி வாசிக்கின்றனர்.
ஆனாலும், துணை மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் திரைமறைவு அரசியல் மோதல் அனைத்து நிலைகளிலும் நடந்து வருகிறது. அதன் காரணமாகவே, நேற்று முன்தினம் துணைமேயர் பங்கேற்ற ரூ.2,300 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டத்தை பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
இதுகுறித்து திமுக கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் 67 திமுக கவுன்சிலர்கள் இருந்தும் மேயர், மண்டலத் தலைவர்கள் இல்லாத சூழல். இத்தகைய நிலை வேறு எந்த மாநகராட்சியிலும் இல்லை. சொத்துவரி முறைகேடு வழக்கில் போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்னரே மேயர் நியமனம் என அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கூறி தப்பிக்க பார்க்கின்றனர். உண்மை என்ன என்று அவர்களுக்கே தெரியும். மேயராக யாரை கொண்டுவர வேண்டும் என்பதில் அவர்களுக்கிடையே நிலவும் அதிகார போட்டிதான் பிரச்சினையே.
இதில் கட்சி தலைமை அதிரடியாய் முடிவெடுத்து மேயரை நியமிக்காவிட்டால் அது வரும் தேர்தலில் கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும். மதுரை திமுகவில் யார் நியாயமாக செயல்படுகின்றனர், யாரை மேயராக நியமித்தால் நிர்வாகம் சுமூகமாக செல்லும் என்ற தகவல் கட்சி தலைமைக்கு உளவுப் பிரிவு மூலம் தெளிவாக சென்றடைகிறது.
எனினும் மவுனம் காப்பது கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வது சகஜம். அதைவிடுத்து தாமதப்படுத்துவது கட்சியினரிடையே கடும் மனக்கசப்பை அதிகரிக்கத்தான் உதவும்” என்றனர்.