மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதை எதிர்த்து 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்துக்கு புதன்கிழமை பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தில், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கொல்கத்தா மாணவர்கள் சங்கம் அறிவித்து தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாபெரும் பேரணி நடத்திய மாணவர்களை ஹெளரா பாலத்தில் தடுப்புகள் வைத்து காவல்துறையினர் தடுத்தனர்.
தடுப்புகளை மீறி மாணவர்கள் செல்ல முயன்றதால், அவர்கள் மீது தடியடி நடத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், பல மாணவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், அமைதியாக போராடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து மாநிலம் தழுவிய 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்துக்கு புதன்கிழமை பாஜக அழைப்பு விடுத்தது.
இன்று காலை 6 மணிமுதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், வடக்கு வங்காள மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றது.
ஓட்டுநர்களின் பாதுகாப்பு கருதி தலைக்கவசம் அணிந்து பேருந்தை இயக்க மாநில போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, உத்தர தினாஜ்பூர், கூச் பெஹார் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்தபடி பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
மேலும், பாஜகவின் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.