மேலிட பொறுப்பாளர் சந்திப்பால் புதுச்சேரி பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்களின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு | Puducherry BJP Chief Talks with Disgruntled MLAs: Delhi Trip Postponed

1276362.jpg
Spread the love

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்ல இருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து என்ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே மோதலும், விரிசலும் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்கள் செயல்பாடுகள்தான் காரணம் என பாஜக எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் சிவசங்கர், அங்காளன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்எல்ஏ-வான வெங்கடேசன் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர்.

ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் மலிந்துவிட்டதாகவும், புரோக்கர்கள் மூலம் ஆட்சி நடப்பதாகவும், முதல்வர் ரங்கசாமி, பாஜக எம்எல்ஏ-க்களிடம் பாகுபாடு காட்டுவதாகவும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் குற்றம்சாட்டினர். இதேநிலை தொடர்ந்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்பதால், ரங்கசாமி அரசுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கி வெளியிலிருந்து ஆதரிக்க வேண்டும் எனவும் டெல்லியில் பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினர்.

இதையடுத்து பாஜக தலைமையானது, புதுவை பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானாவை மீண்டும் நியமித்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண அறிவுறுத்தியது. இதையடுத்து பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா இன்று புதுவைக்கு வந்தார். பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், ஆதரவு எம்எல்ஏ-க்கள், நியமன எம்எல்ஏ-க்களுக்கு கட்சி அலுவலகத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களுடன் ஆலோசனை நடத்த நிர்மல்குமார் சுரானா கட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

மாநில தலைவர் செல்வகணபதி எம்பி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணக் குமார், எம்எல்ஏ-க்கள் ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் தனித்தனியாகவும், கூட்டாகவும் பாஜக பொறுப்பாளர் சுரானா பேச்சுவார்த்தை நடத்தி கருத்துகளை கேட்டறிந்தார். எனினும் மதியம் 12 மணி வரை அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கட்சி அலுவலகத்துக்கு வரவில்லை. இதனிடையே, என்ஆர். காங்கிரஸ் உடனான கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதன் பிறகும் தொடரும் என்று கட்சியின் நிலைப்பாட்டை நிர்மல்குமார் சுரானா தெரிவித்தார்.

நண்பகலில் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், அங்காளன், வெங்கடேசன், சிவசங்கர் ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து கட்சி தலைமை அலுவலகத்தின் முதல் மாடியில் நிர்மல்குமார் சுரானா, அதிருப்தி எம்எல்ஏ-க்களை தனியாக சந்தித்தார். அப்போது அவர்கள், எம்பி செல்வகணபதி, அமைச்சர் சாய் சரவணக்குமார் அறையில் இருக்கக் கூடாது என கூறினர். இதையடுத்து இருவரும் அங்கிருந்து வெளியே வந்துள்ளனர். அதன் பிறகு அதிருப்தி எம்எல்ஏ-க்களிடம் பேசிய சுரானா, கட்சி மேலிடம் அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளதாகவும், எம்எல்ஏ-க்களுக்கு தேவையானவற்றை செய்துதர தயாராக இருப்பதாகவும் கூறி அவர்களை சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.

இச்சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிருப்தி எம்எல்ஏக்கள், “தேசியத் தலைவர் நட்டாவிடம் கூறிய அனைத்து தகவல்களையும் மேலிட பொறுப்பாளரிடம் கூறியுள்ளோம். அவர் மேலிடத்தில் கூறி எங்களுக்கு பதில் அளிப்பார். இதர விஷயங்களை நேரம் வரும்போது தெரிவிப்போம். அமித் ஷாவை சந்திக்க இன்று டெல்லி செல்வதாக இருந்த பயணம் ஒத்திவைத்துள்ளோம். இந்தச் சந்திப்புக்கான நேரம் கிடைத்தவுடன் டெல்லி செல்வோம்” என்று கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *