மிகச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதிமுக-வை விட்டு விலகி திமுக-வில் இணைந்த வா.மைத்ரேயனை மாநில கல்வியாளர் அணி துணைத் தலைவர் பதவியில் அமர்த்தி இருக்கிறது திமுக.
மைத்ரேயன் அடிப்படையில் ஓர் ஆர்எஸ்எஸ்-காரர். 1991-ல் பாஜக-வில் இணைந்த இவர் மாநில செயற்குழு உறுப்பினரானார். இதன் தொடர்ச்சியாக மாநில பாஜக பொதுச்செயலாளராகவும் துணைத் தலைவராகவும் அடுத்தடுத்து பதவி வகித்தார். இருந்த போதும் கட்சிக்குள் ஏற்பட்ட மனக்கசப்புகள்
காரணமாக, பாஜக-வை விட்டு விலகி அதிமுக-வில் இணைந்தார். 2001 தேர்தலில் இவரை மயிலாப்பூரில் நிறுத்தினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் தோற்றுப் போனாலும் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டார் மைத்ரேயன். தொடர்ந்து மூன்று முறை இவருக்கு அந்த வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் பக்கம் சாய்ந்த மைத்ரேயன், ஒருகட்டத்தில் அங்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு இபிஎஸ் பக்கம் வந்தார். ஆனால், திரும்பி வந்த தன்னை இபிஎஸ் திரும்பிப் பார்க்காமல் இருந்ததால் மீண்டும் 2023 ஜூனில், பாஜக-வுக்கே திரும்பினார் மைத்ரேயன். அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியை தந்தது பாஜக.
ஆனபோதும், அடுத்த ஒரே வருடத்தில் மீண்டும் அதிமுக-வுக்கே யு டர்ன் அடித்தார். இம்முறை அவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக அமரவைத்தார் இபிஎஸ். ஆனால், ஒரு வருடம்கூட அங்கு நிலைக்காதவர், கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திமுக-வில் இணைந்தார். இவருக்குள் இப்படியொரு திட்டம் இருப்பதை அறிந்த இபிஎஸ், மைத்ரேயன் அறிவாலய பிரவேசம் செய்யும் முன்பாகவே அவரை கட்சியிலிருந்து கட்டம் கட்டினார்.
இந்த நிலையில், 2026 தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் மைத்ரேயனுக்கு திமுக வாய்ப்பளிக்கும் என பரவலாகப் பேசப்படும் நிலையில், அவரை திமுக கல்வியாளர் அணிக்கு துணைத் தலைவராக்கி இருக்கிறார் ஸ்டாலின். திமுக-வின் 75 ஆண்டு கால வரலாற்றில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் முறையாக மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, மயிலாப்பூரும் மைத்ரேயனுக்கு தகைக்கிறதா என்று பார்க்கலாம்.